தஞ்சை பெரியகோவில் சித்திரை பெருவிழா
தஞ்சை பெரியகோவில் சித்திரை பெருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தஞ்சை பெரியகோவில் சித்திரை பெருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரை பெருவிழா
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் பாரம்பரிய சின்னமாகவும், சோழர் கால கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின் 15-ம் நாளன்று தேரோட்டம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பல்லக்கிலும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது.
சந்தனக்காப்பு அலங்காரம்
19-ந் தேதி காலையில் பல்லக்கிலும், மாலையில் மூஞ்சுறு வாகனத்திலும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. 20-ந் தேதி காலை 8 மணிக்கு விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. 21-ந் தேதி காலையில் பல்லக்கிலும், மாலை 6.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்திலும் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.
22-ந் தேதி காலையில் சுப்பிரமணியருக்கு சந்தனகாப்பு அலங்காமும், மாலையில் சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடும் நடக்கிறது. 23-ந் தேதி காலையில் நால்வர் பல்லக்கில் புறப்பாடும், மாலையில் சூரிய பிரபையில் சந்திரசேகரர் புறப்பாடும், 24-ந் தேதி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திர பிரபையிலும் சந்திரசேகரர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் சாமி புறப்பாடு நடக்கிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்தமாதம் (மே) 1-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர் நிலைக்கு வருகின்றனர். பின்னர் தியாகராஜசாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருளுகிறார்.
விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்மாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளுவார்கள். பின்னர் 4 வீதிகளிலும் தேர் வடம்பிடித்து இழுக்கப்படும். அடுத்தமாதம் 4-ந் தேதி மாலை கொடியிறக்கப்பட்டு, சித்திரை திருவிழா நிறைவடைகிறது. சித்திரை பெருவிழாவில் 18 நாட்களும் காலையில் திருமுறை விண்ணப்பம், மாலையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.