நிலுவை ஊதியம் வழங்க கோரி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை டேங்க் ஆபரேட்டர்கள் முற்றுகை
நிலுவை ஊதியம் வழங்க கோரி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை டேங்க் ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை ஊதியம் மற்றும் நிலுவை ஊதிய தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் ஊதியம் மற்றும் நிலுவை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஒன்றிய தலைவர் சேகர் தலைமையில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இதுதொடர்பாக ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையேற்ற டேங்க் ஆபரேட்டர்கள் போராட்டத்தை கைவிட்டு ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் ஒரு மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.