கார் மீது டேங்கர் லாரி மோதி 2 பேர் பலி
வேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் பாய்ந்த காரின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் பாய்ந்த காரின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பசுமாத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் நித்யா (வயது 24). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த துரை மகன் சுரேந்தர் (17), மார்கபந்து மகன் கமலேஷ் (23) ஆகியோர் நேற்று மாலை காரில் வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் உறவினர் ஒருவர் காத்திருந்ததாகவும், அவரை அழைத்து செல்வதற்காக 3 பேரும் காரில் வந்தாக கூறப்படுகிறது.
அவர்களது கார் மாலை 5 மணியளவில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொய்கை மேம்பாலத்தின் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பிகளை இடித்து தள்ளி விட்டு மறுபுறம் சென்றது.
அப்போது சென்னை-பெங்களூரு சாலையில் வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது.
லாரியின் முன்பக்கத்தில் உள்ள ஒருபுற டயர் இரும்பு கம்பியுடன் முறிந்து கழன்று ஓடியது. லாரி ஒருபுற டயருடன் சிறிதுதூரம் சென்று சாலையோரம் நின்றது.
2 பேர் பலி
இந்த விபத்தில் நித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுரேந்தர், கமலேஷ் அலறி துடித்தனர். இதைக்கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிதுநேரத்தில் சுரேந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கமலேசிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்தல் மற்றும் கார், லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்...
இதற்கிடையே 'மாண்டஸ்' புயலினால் குடியாத்தம் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்து விட்டு காரில் வேலூர் நோக்கி திரும்பி கொண்டிருந்தார். விபத்தை கண்ட கலெக்டர் உடனடியாக காரில் இருந்து இறங்கி மீட்பு பணியை பார்வையிட்டு துரிதப்படுத்தினார். போக்குவரத்தை நெரிசலை உடனடியாக சரி செய்யும்படி வருவாய்த்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைதுறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.