தார் தொழிற்சாலை கட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தம்
பேரணாம்பட்டு அருகே தார் தொழிற்சாலை கட்டுமான பணி தடுத்து நிறுத்தப்பட்டது.
தார் தொழிற்சாலை
பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் கிராமத்தில் கிரானைட் கற்கள் நிறைந்த கல்லேரி மலைப்பகுதியையொட்டி தனியார் ஒருவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ராஜக்கல் ஊராட்சி நிர்வாக அனுமதி பெற்று தார், ஜல்லி கலவை தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணிகள் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிது. இதனையறிந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலத்தடி நீர், சுற்று சூழல் மாசு ஏற்படும் எனக்கூறி கடந்த சனிக்கிழமை பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறனிடம் தார் தொழிற்சாலை இயங்க அனுமதியளிக்க கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.
இந்த நிலையில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் கிராம மக்கள் நேற்று வேலூர் மாவட்ட கலக்டர் குமாரவேல் பாண்டியனிடம் கோரிக்கை மனு வழங்கி, தார் தொழிற்சாலை இயங்க அனுமதிக்கக்கூடாது என முறையிட்டனர். இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இது குறித்து விசாரணை நடத்தி, கட்டுமான பணிகளை நிறுத்துமாறு குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கட்ராமன், பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
பணிகள் நிறுத்தம்
இதனைத் தொடர்ந்து மேல்பட்டி வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, ராஜக்கல் கிராமநிர்வாக அலுவலர் யோகானந்தம், கிராம உதவியாளர் சுரேஷ்குமார் மற்றும் மேல்பட்டி போலீசார் ஆகியோர் சென்று தார் தொழிற்சாலை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.