கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரன்வதம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரன்வதம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரன்வதம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாரகாசூரன் வதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5-ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் வீரபாகு மூன்றுமுறை தூது சென்ற பின்னரும் பணியாத சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று, சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும்.
வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.