புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும்
தாணிக்கோட்டகத்தில் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
வாய்மேடு:
தாணிக்கோட்டகத்தில் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
சேதமடைந்த சாலை
.நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் சேக்குட்டி தேவன் காடு பகுதியில் இருந்து வானங்காடு வழியாக தாணிக்கோட்டகம் தெற்கு காடு பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இடுப்பளவுக்கு செல்லும் தண்ணீர்
இந்த வழியாகத்தான் பொதுமக்கள் தாணிக்கோட்டகம் கடைத்தெருவுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு மாணவ,மாணவிகள் சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் இந்த பகுதியில் உள்ள வாய்க்கால்களில் பாலம் இல்லாததால், தண்ணீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. அப்போது தண்ணீர் இடுப்பளவுக்கு செல்லும். இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்
நடவடிக்கை
மேலும் இந்த பகுதியில் தெருவிளக்குகள், மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.