மாநகராட்சியில் வரி பாக்கி ரூ.100 கோடி வசூலிக்க இலக்கு -மேயர் இந்திராணி தகவல்


மாநகராட்சியில் வரி பாக்கி ரூ.100 கோடி வசூலிக்க இலக்கு -மேயர் இந்திராணி தகவல்
x

மாநகராட்சியில் வரி பாக்கி ரூ.100 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மேயர் இந்திராணி கூறினார்.

மதுரை


மாநகராட்சியில் வரி பாக்கி ரூ.100 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மேயர் இந்திராணி கூறினார்.

ரூ.55 கோடி

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரை மாநகரில் சிறப்பு மற்றும் நிதி பொதுநிதி மூலம் ரூ.55 கோடி செலவில் தார்சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று பாதாளசாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வருவாயை பெருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாநகரில் உள்ள கடைகள், மார்க்கெட், சைக்கிள் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வருவாய் இனங்களும் ஏலம் விடப்பட உள்ளன. மேலும் ஒவ்வொரு மண்டலத்தில் அதிக வரி பாக்கி வைத்து இருக்கும் 10 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாநகரில் நிலுவையாக உள்ள ரூ.100 கோடி வரை வரி பாக்கியை வசூல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.க. உறுப்பினர் கோஷம்

தொடர்ந்து, பா.ஜனதா கட்சி 86-வது வார்டு கவுன்சிலர் பூமா எழுந்து நின்று மாநகராட்சிக்கு எதிராக கோஷமிட்டார். அப்போது அவர் மாநகராட்சியை கலைத்து விடுங்கள், மக்களுக்கு எந்த பணியும் செய்யாத மாநகராட்சி எதற்கு? என்று கோஷமிட்டார். மேலும் எனது வார்டில் கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.

எனவே பொதுகழிப்பறை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் மாநகராட்சி, பா.ஜனதா வார்டு என்பதனால் அதனை புறக்கணிக்கின்றனர் என்றார். அதனைத்தொடர்ந்து போலீசார் உள்ளே வந்து, அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அதன்பின் கூட்டம் தொடர்ந்து நடந்தது.

மக்கள் பணிகள்

பூமிநாதன் எம்.எல்.ஏ. பேசும் போது, மதுரையின் முதல் குடிமகன் நமது மேயர் தான். எனவே மேயரை, அனைவரும் வணக்கத்திற்குரிய அல்லது மாண்புமிகு என்று அழைக்க வேண்டும். ஆனால் இங்கு பேசும் அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் சோலைராஜா, அம்மா, ஏம்மா என்று எல்லாம் பேசுகிறார். சட்டசபையில் கூட சபாநாயகரை முதல்-அமைச்சர் கூட மரியாதையாகதான் பேசுவார். அதுதான் சபை மாண்பு. எனவே மாநகராட்சியின் சபை மாண்பையும், கண்ணியத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் சோலைராஜா பேசும்போது, மேயரை அம்மா என்று அழைக்கக்கூடாது என்று பூமிநாதன் எம்.எல்.ஏ. கூறுகிறார். நான் மிகுந்த கண்ணியத்துடன் அம்மா என்று தமிழர்கள் போற்றும் மாண்புடன்தான் அழைக்கிறேன். இது மரியாதை குறைவு இல்லை. இருப்பினும் இனி, வணக்கத்திற்குரிய மேயர் என்றே அழைக்க முயற்சிக்கிறேன். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பணிகள் தடையின்றி நடந்தன. அப்போது பொதுநிதியில் இருந்துதான் கால்வாய் தூர்வாருவது, சுகாதார பணி ஆகிய அத்தியாவசிய பணிகள் நடந்தன. ஆனால் தற்போது சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் வரி வருவாயும் அதிகரித்துள்ளது. ஆனால் எந்த அத்தியாவசிய மக்கள் பணியும் நடப்பதில்லை என்றார்.


Next Story