500 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு


500 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:17:22+05:30)

இந்தியாவில் வருகிற 2030-ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

இந்தியாவில் வருகிற 2030-ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

மத்திய அரசின் எரிசக்தி தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்றது. இதற்கு நிலைக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமை தாங்கினார். கூட்டத்தில், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் செயல்பாடுகள், குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய சூரிய சக்தி மின்சார கழகம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நிலைக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறியதாவது:-

நாட்டில் வருகிற 2030-ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை எட்டுவதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, ஊக்குவித்து வருவதன் காரணமாக சூரிய சக்தி மின்உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியா 2-வது இடம்

சூரிய சக்தி மின் உற்பத்தியில் அரசு நிர்ணயித்த 62 ஜிகாவாட் என்ற இலக்கை மிஞ்சி 100 ஜிகாவாட் அளவை தற்போது எட்டி சாதனைப் படைத்து உள்ளது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா குறித்து தமிழக அரசு எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து மின்சார துறை செயலரிடம் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகள், இத்துறை பங்குதாரர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் வகுக்கப்பட்டு இந்த மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story