14 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு


14 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு
x

நெல்லை மாவட்டத்தில் வருகிற நிதி ஆண்டில் 14 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, நெல்லையில் நடந்த பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் வருகிற நிதி ஆண்டில் 14 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, நெல்லையில் நடந்த பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

பசுமை தமிழ்நாடு இயக்கம்

நெல்லை கொக்கிரகுளம் தைப்பூச மண்டபம் அருகில் பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வன அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

33 சதவீத பசுமை பரப்பு அதிகரிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட்டின்போது 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் 260 கோடி நாட்டு மரக்கன்றுகளை நடுவதன் மூலம் தமிழ்நாட்டின் வனம், பசுமை பரப்பு 33 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை குழு அமைக்கப்பட்டு, கலெக்டர் தலைவராகவும், மாவட்ட வன அலுவலர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டு மரக்கன்றுகளை அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், நகர், ஊர்ப்புற பகுதிகளிலும் அரசு துறைகள், தனியார் கல்வி நிலையங்கள், அரசுசாரா அமைப்புகள், பொதுமக்கள் பங்களிப்புடன் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

2 லட்சம் மரக்கன்றுகள்

இதற்காக நெல்லை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 2.05 லட்சம் மரக்கன்றுகள் நாற்றாங்காலில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வருகிற நிதி ஆண்டில் மாவட்டத்தில் 14 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்ய மாவட்ட பசுமை குழுவால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, வனச்சரக அலுவலர் சரவணகுமார், வனவர் அழகர் அரசு, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், நெல்லை தாசில்தார் செல்ல சுப்பிரமணியன், சாரதா கல்லூரி மாணவிகள், ரோட்டரி சங்கம், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சைக்கிள் ஊர்வலம்

முன்னதாக முத்தமிழ் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு, குறிச்சி பகுதியில் இருந்து மாணவர்களுடன் இணைந்து சைக்கிள் ஓட்டினார்.


Next Story