காவிரி கரையோரம், கோவில்களில்தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


காவிரி கரையோரம், கோவில்களில்தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

தை அமாவாசையையொட்டி காவிரி கரையோரம், கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமானவர்கள் வழிபட்டனர்.

சேலம்

சேலம்,

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் காவிரி ஆறு போன்ற நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று தை அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளான காவிரி கரையோரங்களில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

சித்தேஸ்வரர் கோவில்

இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர் தை அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் அங்குள்ள புனித தீர்த்தக்குளங்களில் நீராடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு உப்பு குளத்தில் உப்பு, மிளகை, தலையை சுற்றி போட்டனர்.

மேலும் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அப்போது வாழை இலையில் தேங்காய், பழம், பூ, மற்றும் காய்கறிகள், வைத்து அர்ச்சகர்கள் மந்திரங்களை கூறினர். தங்கள் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி தர்ப்பணம் கொடுத்தவர்கள் வேண்டிக்கொண்டனர். தொடர்ந்து எள் சாதத்தை காகங்களுக்கு வைத்து வழிபட்டு புனித நீராடி சித்தேஸ்வர சாமியை ஏராளமான பக்தர்கள் வணங்கி சென்றனர்.

தேவூர் கல்வடங்கம் ஆறு

தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்த தலமாக கருதப்படுவதால் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான மக்கள், குடும்பத்துடன் கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு அதிகளவில் வந்தனர். அங்கு அவா்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

சேலம் சுகவனேசுவரர் கோவில் அருகே உள்ள வாசவி சுபிட்ஷா ஹாலில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து எள், சாதம் கலந்த உணவை சம்பந்தப்பட்டவர்கள் காகங்களுக்கு வைத்து வழிபட்டனர். இதேபோல் சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியிலும் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சேலம் சின்னதிருப்பதி பெருமாள் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்திலும் பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

வெண்ணங்கொடி முனியப்பன் கோவில்

சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலிலும் தை அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி பூஜை நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு காய்கறிகள், சிறுதானியங்கள், கீரை வகைகளை சாதத்துடன் கலந்து கும்ப படையல் என்ற பெயரில் படையல் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இதில் பலர் குழந்தை வேண்டி தொட்டில் கட்டியும், திருமண வரம் வேண்டி ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் சூலாயுதத்தில் கட்டியும் வேண்டுதல் வைத்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கும்ப படையல் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story