காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டரை இறுதி செய்யக்கூடாது


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டரை இறுதி செய்யக்கூடாது
x

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அருகே, பார்கள் நடத்தும் உரிமத்துக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த 2-ந்தேதி டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே பார் நடத்தும் உரிமம் பெற்றுள்ள எஸ்.சதீஷ்குமார், திருநாவுகரசு உள்பட 28 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த முறை நடந்த டெண்டரில் அதிக தொகை குறிப்பிட்டு, பார் நடத்தும் உரிமத்தை பெற்றுள்ளோம். இந்த நிலையில் புதிய டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், டெண்டரில் வெற்றி பெறும் நபருக்கு, ஏற்கனவே பார் நடத்தி வரும் நபர் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ரத்துசெய்ய வேண்டும்

இந்த நிபந்தனை சட்டவிரோதமானது. பார் நடத்தும் இடத்தை அதன் உரிமையாளருடன் முறையாக ஒப்பந்தம் செய்து வாடகைக்கு பெற்றுள்ளோம். அப்படி இருக்கும்போது, நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ள இந்த இடத்தை டெண்டரில் வெற்றி பெறும், அதாவது 3-வது நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் எங்களை நிர்ப்பந்திக்க முடியாது.

ஒருவேளை, அவ்வாறு இடத்தை ஒப்படைத்து, ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால், இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள நாங்கள்தான் பொறுப்பாவோம். எனவே, கடந்த 2-ந்தேதி வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

பதில் மனு

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் சிங்காரவேலன், வக்கீல் எம்.மணிமாறன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல்செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ''டெண்டர் நடைமுறையை தொடரலாம். ஆனால், யாருக்கும் டெண்டர் வழங்கக்கூடாது. அதாவது, டெண்டர் நடவடிக்கையை இறுதி செய்யக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். 26-ந்தேதிக்குள் டாஸ்மாக் நிறுவனம் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.'' என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story