மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை அரசு பணியாளர் சங்கத்தினர் முற்றுகை 50 பேர் கைது


மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை    அரசு பணியாளர் சங்கத்தினர் முற்றுகை    50 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர் சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர் சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் முதுநகர் அருகே சிப்காட்டில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.கே.சிவகுமார், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாநில நிதி காப்பாளர் சாமிநாதன், மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

முற்றுகை

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் சரவணன் தற்காலிக பணி நீக்கத்தை கண்டித்தும், அவரை மீண்டும் பணியமர்த்த கோரியும், தீபாவளிக்கு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கியதை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பியதோடு, திடீரென டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்துக்குள் எந்த வாகனங்களும் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டது.

கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரசார செயலாளர் சுகமதி, சத்துணவு பணியாளர் சங்க தலைவர் சீனிவாசன், டாஸ்மாக் பணியாளர் சங்க செயல் தலைவர் பழனிபாரதி, இணை செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட தலைவர் அல்லி முத்து, மாவட்ட செயலாளர் பாலமுருகன், சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர். அதன்பிறகு கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story