டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் கொடுத்தனர். இடுவாய் பகுதியை சேர்ந்த பா.ஜனதாவினர், பொதுமக்கள் அளித்த மனுவில், 'குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் அதனுடன் சேர்ந்து பார் செயல்பட்டு வருகிறது. மதுப்பிரியர்களால், குடியிருக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் மதுப்பிரியர்கள் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த கடையை அகற்றக்கோரி 5 முறை இடுவாய் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில்தீர்மானம் இயற்றி கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பாரில் சட்டவிரோத மதுவிற்பனை நடக்கிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றி பார் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி பாலசுப்பிரமணியம் (வயது 62) அளித்த மனுவில், 'ஆண்டிப்பாளையம் ரோடு பள்ளி அருகில் சாலையோர கடைகளில் மாமூல் கேட்டு வார்டு கவுன்சிலரின் கணவர் கூறியதாக பணம் வசூலித்தனர். இதுகுறித்து அறிந்ததும் எங்கள் கட்சி வாட்ஸ்அப் குரூப்பில் தகவல் பதிவிட்டேன். இதனால் என்னை கவுன்சிலரின் கணவர் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டினார். அதன்பிறகு நிறைய பேர் என் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்தனர். மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
செல்போன் கோபுரம்
பெருமாநல்லூர் பா.ஜனதா கட்சியினர் அளித்த மனுவில், 'பெருமாநல்லூர் பொடாரம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி, காளிபாளையம் ஊராட்சி எஸ்.ஆர்.நகர், புதுப்பாளையம், செந்தில்நகர் பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் இன்னும் தொடங்காததால் குடிநீர் பிரச்சினை அதிகம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி விரைவில் குடிநீர் வசதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
பெருமாநல்லூர் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். குடியிருப்பு மத்தியில் செல்போன் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர்.