டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
மங்கை மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் தீர்மானம்
திருவெண்காடு:
திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய பாசறை தலைவர் அனிதா தலைமை தாங்கினார்.. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன், பாசறை மாவட்ட தலைவர் மாமல்லன், ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பாசறை செயலாளர் கார்த்திக் வரவேற்றார். மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் பாரதி, மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாபு ஆகியோர் பேசினர். மங்கை மடம் கடைத்தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக இரவு நேரத்தில் டாக்டர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாலி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் அ.தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் திருமாறன், மாவட்ட பிரதிநிதிகள் நடராஜன், சிவதாஸ், மாவட்ட மீனவர் அணி தலைவர் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாசறை ஒன்றிய இணைச் செயலாளர் மாமல்லன் நன்றி கூறினார்.