டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென்று குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென்று குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.
பெறப்பட்ட 342 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
காட்பாடியை அடுத்த விண்ணம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஏரி நீரை அடிக்கடி வெளியேற்றிவிட்டு மீன் பிடிக்கின்றனர். இதனால் எங்களது விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமாகி நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். ஆகவே மீன்பிடிக்க ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அடிப்படை வசதிகள்
வேலூர் பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அளித்த மனுவில். கொணவட்டம் தேவிநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைகள் சீரமைக்காமல் உள்ளது. மேலும், குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடங்கியவுடன் இப்பணிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று தெரிவித்தும் இதுவரை தொடங்கவில்லை. இப்பகுதிமக்கள் குடிநீருக்காக 6 வழிச்சாலையை கடந்து சென்று வர வேண்டி உள்ளது. இதில், சிலர் விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே, இங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
காகிதப்பட்டறையை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் மொத்தம் 6 மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு குடிக்க வரும் போதை ஆசாமிகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. குடிமகன்கள் மது குடித்து விட்டு சாலையில் விழுந்து போக்குவரத்துக்கும், பொதுமக்களும் இடையூறு செய்கின்றனர். இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் மது அருந்துகின்றனர். எனவே, இங்குள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
மேம்பாலம்
குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் எங்கள் பகுதியில் ஒவ்வொருவரும் சிறிய அளவு நிலம் வைத்துகொண்டு விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்தின் மேலே மேம்பாலம் அமைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனால் எங்கள் விவசாயம் பாதிக்கப்படும். எனவே எங்களின் நிலத்தில் மேம்பாலம் வராதபடி தடுக்க வேண்டும். ஏற்கனவே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மேம்பாலமும், தெற்கு திசையில் ஒரு மேம்பாலம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேம்பால திட்டப்பணியை வேறு பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தனர்.