டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மரகதலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முருகன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் ஒன்றிணைப்பு மாநில அமைப்பு செயலாளர் சுவாமிநாதன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில தலைவர் சரவணனுடைய பணிநீக்கத்தை ரத்து செய்து பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
பின்னர் வடக்கு ரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவராக அந்தோணியும், மாவட்ட செயல் தலைவராக முருகனும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், மாவட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் நமசிவாயம், பூரணம், எம்.சுந்தர்ராஜ், நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.