டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் -அண்ணாமலை பேச்சு


டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் -அண்ணாமலை பேச்சு
x

பனை தொழிலாளர்கள் ஏழ்மையை போக்க டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என அண்ணாமலை பேசினார்.

ராமநாதபுரம்,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து நேற்று 4-வது நாளாக நடைபயணத்தை தொடங்கினார்.

அவருடன் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் நடந்து வந்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதியில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இளைஞர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு நடந்தார். இளநீர் குடித்தபடி கடைக்காரருடன் உரையாடினார்.

கீழக்கோட்டை கிராமத்தில், வாகனத்தின் மீது நின்று அப்பகுதி மக்கள் மத்தியில் பேசினார். அழியாதான்மொழி கிராமத்தில், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். பாதயாத்திரையில் அண்ணாமலை பேசியதாவது:-

கள்ளுக்கடைகள்

இந்தியாவில் 10 கோடி பனை மரங்கள் இருக்கின்றன. அதில். தமிழகத்தில் 5 கோடி பனைகளும், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடியே 50 லட்சம் பனைகளும் உள்ளன. இந்தியாவில் உள்ள பனைகளில், 15 சதவீதம் இந்த மாவட்டத்தில் உள்ளன.

நானும், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் பனை தொழிலாளி ஒருவரது வீட்டிற்கு சென்றோம். அவரின் கஷ்டங்களை கூறினார். நாங்கள் கூறுவது என்னவென்றால், தமிழகத்தில் உள்ள 5500 டாஸ்மாக் கடைகளில் நான்கில் மூன்று பங்கை மூடிவிடுங்கள். தென்னை, பனை கள்ளுக்கடைகளை திறந்துவிட வேண்டும். அப்படி ஓர் நடவடிக்கை வரும் பட்சத்தில் பனை தொழிலாளர் வீட்டில் ஏழ்மை என்பதே இல்லாமல் போய்விடும்.

தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலையில் இருந்து வரும் மதுவை மக்கள் குடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளுக்கடையை திறக்க மறுக்கிறார்கள்.

எம்.எல்.ஏ. கண்டித்தாரா?

பிரதமர் மோடி, கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தார். இத்தனை ஆண்டு காலம் கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருந்தபோது ஒரு சொட்டு தண்ணீர்கூட குறையாமல் வந்து கொண்டிருந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மேகதாதுவில் அணை கட்டுவோம், தண்ணீர் தரமாட்டோம் என்கிறார்கள். இங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருமாணிக்கம் அதை எல்லாம் கண்டித்தாரா?

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நீங்கள் மறந்துவிட்டீர்கள். அதை உங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான் நான் வந்துள்ளேன். ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் தூர்வாரப்படும் என்றனர். ஆட்சிக்கு வந்து 28 மாதம் ஆகியும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த மாவட்டத்தில் பல இடங்களில் சகோதரிகள் வண்டியில் குடிநீர் குடங்களை வைத்து தள்ளிக்கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது. தாங்க முடியாத கொடுமை இது.

ஒரு பக்கம் நரேந்திர மோடி ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலமாக தண்ணீர் கொடுக்க வேண்டும் என்கிறார். தமிழக ஆட்சியாளர்கள் அதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. பார்க்கும் இடத்தில் எல்லாம் பெண்கள், ராமநாதபுரத்தில் மோடி நிற்பாரா? என்கிறார்கள். நீங்கள் எதனால் அப்படி கேட்கிறீர்கள் என்பது புரிந்தது. மோடி ராமநாதபுரத்தில் நின்றால்தான் குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினையும் தீரும் என மக்கள் நம்புகிறார்கள். நீங்கள் நினைப்பதை நிச்சயமாக எங்கள் தலைவரிடம் கொண்டு சேர்ப்பது எங்கள் கடமை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு முழுமையாக பிரதமர் மோடிக்கும் பா.ஜனதாவுக்கும் கிடைக்க வேண்டும். உங்கள் அனைவரின் பாதத்தை தொட்டு வணங்கி எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தை விட்டு போவதற்கு முன் என் இதயத்தை இங்கே விட்டுச் செல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.


Next Story