குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி
x
தினத்தந்தி 18 May 2023 2:45 AM IST (Updated: 18 May 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

உலக தேயிலை தினத்தையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது.

நீலகிரி

குன்னூர்

உலக தேயிலை தினத்தையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது.

தேயிலை கண்காட்சி

இந்திய தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் முத்துக்குமார் நேற்று குன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

வருகிற 21-ந் தேதி உலக தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் தேயிலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை வாரியம், மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை சார்பில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி நாளை மறுநாள் (சனிக்கிழமை), 21-ந் தேதி 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் மனித சங்கிலி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தேயிலை கண்காட்சியை தேயிலை வாரிய செயல் இயக்குனர் தலைமையில், ஆ.ராசா எம்.பி. முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் காலை 11 மணியளவில் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிடுகிறார். கண்காட்சியில் பல்வேறு வகையான தேயிலைத்தூள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் சுவையறியும் திறன் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விற்பனை செய்யப்படுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலைத்தூளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, கலப்படம் இல்லாத தேயிலைத்தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இண்ட்கோசர்வ் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே தேயிலை உற்பத்தி மற்றும் கலப்படமில்லாத தேயிலைத்தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 21-ந் தேதி கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையை 500-க்கும் மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர்.

கண்காட்சியில் கலப்பட தேயிலைத்தூள் குறித்து புகைப்படங்களுடன் துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது. குறிப்பாக தேயிலைத்தூள் தயாரிக்கும் எந்திரங்களை காட்சிப்படுத்தி, பச்சை தேயிலையில் இருந்து தேயிலைத்தூள் தயாரிக்கும் முறை குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்கப்படுகிறது. நீலகிரியின் சிறப்பு ரக தேயிலைத்தூள் உற்பத்தி, நீலகிரி தேயிலையின் பாரம்பரியம் மற்றும் நுணுக்கங்களை தெரிந்துகொண்டு பயன்பெறும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியை கண்டு களித்து, கலப்படம் இல்லாத தேயிலைத்தூளை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story