ரெயிலில் கியாஸ் அடுப்பில் 'டீ' போட்டதால் விபரீதம்- மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்பெட்டி தீப்பிடித்து 9 பேர் பலி- உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்தவர்கள்
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்பெட்டி தீப்பிடித்து 9 பேர் பலியாகினர்.
மதுரை ரெயில்நிலையத்தில் ரெயில்பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். ரெயில்பெட்டியில் கியாஸ் அடுப்பில் 'டீ' போடும்போது சிலிண்டர் வெடித்ததால், இந்த விபரீதம் நடந்தது.
சுற்றுலா, விசேஷங்களுக்கு செல்ல தனியாக வாடகைக்கு பஸ் பிடித்து செல்வதை போல, ரெயில்களையும், ரெயில் பெட்டிகளையும் வாடகைக்கு பிடிக்கும் வசதி உள்ளது. இந்த ஏற்பாட்டை ரெயில்வே நிர்வாகம் செய்திருக்கிறது.
ஆன்மிகப்பயணம்
அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஒரு ரெயில் பெட்டியை வாடகைக்கு பிடித்து 63 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு ஆன்மிக சுற்றுலாவாக புறப்பட்டனர். அங்கு செயல்படும் மக்சின் என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் பயண ஏற்பாட்டை செய்திருந்தது.
இந்த 63 பேரில் 5 பேர் சமையல்காரர்கள். உடன் வருபவர்களுக்கு உணவு சமைப்பதுதான் இவர்களது வேலை. இதற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை ரெயில் பெட்டியில் கொண்டு வந்தனர். சில கியாஸ் சிலிண்டர்களையும் பதுக்கி வைத்துக்கொண்டு வந்துள்ளனர்.
உணவு தயாரிப்பு
எந்தெந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டு புறப்பட்டார்களோ, அந்த ஊர்களுக்கான செல்லும் ரெயில்களுடன் இவர்களது பெட்டி இணைக்கப்பட்டு பயணிக்கும். அந்த ஊரை அடைந்ததும் ரெயிலில் இருந்து தனியாக இவர்கள் பயணித்த பெட்டி பிரிக்கப்பட்டு, ரெயில் நிலையத்தில் ஓரிடத்தில் நிறுத்திவைக்கப்படும்.
அந்த ஊரில் தாங்கள் காண வேண்டிய இடங்களுக்கு குழுவினர் சென்றுவிட்டு அடுத்த பயணத்துக்காக ரெயில் நிலையம் வருவதற்குள் சமையல்காரர்கள், தங்கள் குழுவினருக்கான உணவை தயார் செய்துவிடுவார்களாம். இதற்காக ரெயில் நிலையத்தில் இருந்து சற்று ஒதுக்குப்புறமான இடத்துக்கு சிலிண்டர் மற்றும் பாத்திரங்களை கொண்டு சென்று சமைத்துள்ளனர்.
மதுரை வந்தனர்
கடந்த 17-ந் தேதி லக்னோ ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் கன்னியாகுமரி சென்றடைந்தனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு இரவில் நாகர்கோவில் வந்து, அடுத்து ராமேசுவரம் வருவதற்காக தயார் ஆனார்கள்.
புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வந்ததும் அவர்கள் பயணித்த பெட்டி இணைக்கப்பட்டு, மதுரை புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது.
பின்னர் இவர்கள் வந்த பெட்டி மட்டும் ராமேசுவரம் செல்லும் ரெயிலில் இணைப்பதற்காக தனியாக கழற்றப்பட்டு மதுரை-போடி ரெயில் பாதையில் புதிதாக போடப்பட்ட பிளாட்பாரம் அருகே நிறுத்திவைக்கப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ரெயில் பெட்டியின் உள்புறத்தை அதில் இருந்தவர்கள் பூட்டிக்கொண்டதாக தெரிகிறது.
கியாஸ் சிலிண்டர் வெடித்தது
காலை 5.15 மணி அளவில், அந்த குழுவினருடன் வந்த சமையல்காரர்கள் ரெயில் பெட்டிக்கு உள்ளேயே ஓரிடத்தில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்து டீ போட்டுள்ளனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. உடனே ரெயில் பெட்டிக்குள் தீப்பிடிக்க தொடங்கி பரவியது. சற்று நேரத்தில் பயணிகள் உடைமைகள், இருக்கைகள் எரியத்தொடங்கின. சுற்றுலா வந்த பயணிகள் அலறினர். அதிகாலை நேரம் என்பதால் சிலர் தூக்க கலக்கத்தில் பதறியபடி எழுந்தனர்.
பூட்டப்பட்ட கதவை திறந்து கொண்டும், ஜன்னல் வழியாகவும் அவசரம் அவசரமாக பலர் வெளியேறினர். அதற்குள் பெட்டி முழுவதும் தீ பரவி பயங்கரமாக எரிந்தது. தீயில் சிக்கியவர்கள் உடல் கருகினர்.
கட்டுக்குள் வராத தீ
மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிவதை கண்ட அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அருகில் உள்ள திடீர் நகரில் இருந்து தீயணைப்பு வாகனம் சென்றாலும், உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பின்னர் மற்ற இடத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வந்தன.
நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் காலை 7.15 மணிக்கு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. அந்த பகுதியே புகைமூட்டமாக காணப்பட்டது.
9 பேர் உடல் கருகி பலி
பின்னர் அந்த பெட்டிக்குள் சென்று பார்த்தபோது 5 ஆண்கள், 4 பெண்கள் என 9 பேர் உடல் கருகி பலியாகி கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது உடல்கள் உடனடியாக வெளியே கொண்டுவரப்பட்டு, ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மேலும் இந்த சம்பவத்தில் லேசான காயம் அடைந்த 6 பேர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கும், பலத்த காயம் அடைந்த 2 பேர் ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த ரெயில் பெட்டி முழுவதுமாக சேதம் அடைந்தது.
உயிர் தப்பிய மற்றவர்கள், ரெயில் நிலையத்தின் பார்சல் அலுவலகம் அருகே உள்ள பயணிகள் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
சம்பவ இடத்துக்கு மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அனந்த், கூடுதல் மேலாளர் செல்வம், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு உள்ளிட்ட அதிகாரிகளும், ரெயில்வே போலீசாரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.
அடையாளம் காணப்பட்ட 7 உடல்கள்
பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களுடன் வந்த உறவினர்களை ரெயில்வே போலீசார், ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். இறந்தவர்கள் அணிந்திருந்த மோதிரம், நகைகள், அவர்களது உடைகளின் பாகங்கள் ஆகியவற்றை பார்த்து அடையாளம் காட்டினர். அவர்கள் இந்தியில் மட்டுமே பேசியதால் போலீசாருக்கும், ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் தகவல் பரிமாற சிரமம் ஏற்பட்டது. பிற்பகல் 4 மணி வரை 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்களது பெயர் விவரம் வருமாறு:-
பரமேஸ்வர் தயால் குமார் குப்தா (வயது 55), சந்திர மன்சிங் (65), அங்கூர்கஷ்யம் (36) ஆகிய 3 ஆண்களும், மிதிலேஷ் குமாரி (62), ஹேமானி (22), சாந்தி தேவி வர்மா (57), மனோரமா அகர்வால் (82) என 4 பெண்களின் உடல்களும் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இன்னும் 2 ஆண்கள் உடல்களை அடையாளம் காண விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
அடையாளம் காணப்பட்ட 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பலியானவர்கள் உடல்களை பதப்படுத்த (எம்பாமிங்) நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உடல்களை ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
நிவாரண உதவி
ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்து உள்ளது. உத்தரபிரதேச அரசு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டு உள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசும் தலா ரூ.3 லட்சம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.