வாகனதிருட்டில் ஈடுபட்ட ஆசிரியர் கைது
உடுமலையை அடுத்த எலையமுத்தூர் செல்வபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 35). விவசாயி.இவர் கடந்த 10-ந்தேதி உடுமலை கச்சேரி வீதியில் உள்ள ஒரு ஓட்டலின் முன்னால் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காபி குடிக்க சென்றார்.சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது யாரோ மர்ம ஆசாமிகள் அவருடைய மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருந்தனர்.அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ராதாகிருஷ்ணன் உடுமலை போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார்.இதனையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.மேலும் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடியவர் உடுமலையை சேர்ந்த செந்தில்குமார் (41) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைத் திருடி போலீசில் மாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது மீண்டும் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட செந்தில்குமாரிடமிருந்து ராதாகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் உள்பட 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.