ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நல போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமன போட்டி தேர்வு என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளின்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும், பணி நியமனத்தின்போது வயதை கருத்தில் கொண்டு வயது தளர்வு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். கலைமணி, திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், ஆசிரியர் கூட்டமைப்பு செல்வராஜ், ரஹீம், கலாநிதி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.