விபத்தில் காயம் அடைந்த ஆசிரியை; கலெக்டர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்
விபத்தில் காயம் அடைந்த ஆசிரியை;யை கலெக்டர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்
மண்ணச்சநல்லூர் அயனாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி விஜயலட்சுமி(வயது 52). இவர் திருவெள்ளறையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் இவர் இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூரில் இருந்து திருவெள்ளறைக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- துறையூர் செல்லும் சாலையில் உள்ள பூனாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் காயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உடனடியாக தனது காரை நிறுத்தி காயமடைந்த விஜயலட்சுமியை அவர் வந்த காரிலேயே ஏற்றிக் கொண்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு பணியில் இருந்த டாக்டரிடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து டாக்டர் செந்தில்குமார் தலைமையில் டாக்டர்கள், விஜயலட்சுமிக்கு சிகிச்சை அளித்தனர். தக்க சமயத்தில் தன்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு தனது காரிலேயே அழைத்துச்சென்ற மாவட்ட கலெக்டருக்கு ஆசிரியை மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.