நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 3,500 பேர் விண்ணப்பம்


நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 3,500 பேர் விண்ணப்பம்
x

நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு சுமார் 3,500 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

தற்காலிக ஆசிரியர் நியமனம்

பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமோ உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் நேற்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் கடைசி நாளான நேற்று நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்ப படிவங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

3,500 பேர் விண்ணப்பம்

நாமக்கல் கல்வி மாவட்டத்தை பொறுத்த வரையில் காலியாக உள்ள 6 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,125 பேரும், 3 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 264 பேரும், தொடக்கக்கல்வியில் காலியாக உள்ள 53 பணியிடங்களுக்கு 659 பேரும் என மொத்தம் 2,048 பேர் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இதேபோல் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு சுமார் 1,500 பேர் விண்ணப்பித்தனர். மாவட்டத்தில் மொத்தமாக தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு சுமார் 3,500 பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story