மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி
வந்தவாசி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பரணி என்பவர் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், இரவு நேரத்தில் மாணவிகளுக்கு 'வாட்ஸ் அப்'பில் வீடியோ கால் செய்வதாகவும் மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் பரணிக்கு தர்மஅடி கொடுத்தனர்.
முற்றுகை
மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பள்ளிக்கு சென்று பெற்றோர் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் பட்டதாரி ஆசிரியர் பரணியை கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.