மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியர் பரிதாப சாவு
செங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
செங்கோட்டை:
கடையநல்லூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் வடக்குவிளை தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் மகன் பொன்மாரி உடையார் (வயது 43). பட்டதாரி ஆசிரியர். இவர் செங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர் பள்ளிக்கு செல்வதற்காக கடையநல்லூரில் இருந்து பஸ்சில் செங்கோட்டைக்கு வந்தார். அங்கு பஸ் நிலையத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பொன்மாரி உடையார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு பட்டுபண்ணை தெருவைச் சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் முகமது பாசித் (20) மீது செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான பொன்மாரி உடையாருக்கு, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆசிரியர் இறந்த சம்பவத்தால் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் சோகத்தில் மூழ்கினர்.