தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
காங்கயம்,
அரசு பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் மற்றும் கணிதத் திறன் வளர்க்க காங்கயம் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது.
கற்றல் திறன்
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த பயிற்சி 10-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அனைவரும் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்புத் திறன் மற்றும் எண்ணறிவு பெறுவதில் பல்வேறு வகையான தடைகள் உள்ளன. எனவே தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் அனைவரும் முழுமையான கற்றல் திறன்களைப் பெற வைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாட்டை மேம்படுத்துதல், கற்பித்தல் துணைக் கருவிகள் பயன்படுத்திக் கற்பித்தல், குழந்தைகளை மகிழ்ச்சியுடன் கற்றலில் ஈடுபடுத்துதல் ஆகிய திறன்களை வளர்க்க வட்டார அளவில் 5 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது.
பயிற்சி
அந்த வகையில் காங்கயம் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி, காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் வட்டார வள மையம் ஆகிய இரண்டு மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் 67 ஆசிரியர்களும் காங்கயம் வட்டார கல்வி அலுவலர்கள் கி.ராமச்சந்திரன், ரா.சுந்தர்ராஜ் ஆகியோரும் பங்கேற்று வருகின்றனர்.
பயிற்சிக்கான மைய ஒருங்கிணைப்பாளராக வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) த.சிவக்குமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் பயிற்றுனர் ஜெ.உமாதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட கலெக்டர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வி.சங்கர், பல்லடம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) இ.ஆனந்தி ஆகியோர் அனைத்து வட்டாரங்களிலும் நடந்துவரும் பயிற்சி மையங்களை பார்வையிட்டு வருகின்றனர்.