கூடலூர் அருகே அரசு பள்ளி கட்டிடங்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்திய ஆசிரியர்கள்


தினத்தந்தி 11 May 2023 7:00 AM IST (Updated: 11 May 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே புளியம்பாறையில் அரசு பள்ளிக்கூட கட்டிடங்களை வர்ணம் தீட்டி ஓவியங்களாக வரைந்து திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் அழகு படுத்தினர். இதற்கு கிராம மக்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே புளியம்பாறையில் அரசு பள்ளிக்கூட கட்டிடங்களை வர்ணம் தீட்டி ஓவியங்களாக வரைந்து திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் அழகு படுத்தினர். இதற்கு கிராம மக்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

பள்ளி கட்டிடங்களில் ஓவியங்கள்

கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே புளியம்பாறை அரசு ஆரம்பப் பள்ளியில் சுமார் 240 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கூடத்துக்கு வரும் குழந்தைகளை கவரும் வகையில் வகுப்பறைகள் மற்றும் வெளிப்புற கட்டிடங்களின் சுவர்களில் திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் அடங்கிய பட்டாம்பூச்சி குழுவினர் வர்ணங்கள் பூசி ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

இதில் அறிவியல், கலாச்சாரம், இயற்கை சூழல் பாதுகாப்பு, மத நல்லிணக்கம், மற்றும் மனிதர்களின் உடல் உறுப்புகளின் பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சந்தோஷ் குமார் தலைமையில் ஆசிரியர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், பிரபு, சுரேஷ்குமார், செந்தில்குமார், காளிதாஸ் ஆகியோர் அடங்கிய குழு 2 நாட்கள் தங்கி ஓவியங்கள் வரையும் பணியை செய்து முடித்தனர்.

ஆசிரியர்களுக்கு பாராட்டு

இதனால் பள்ளிக்கூட கட்டிடங்கள் அழகு நிறைந்து காணப்படுகிறது. தொடர்ந்து குழந்தைகள் மட்டுமின்றி கிராமப்புற மக்களையும் கவர்ந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் தன்னார்வத்துடன் பள்ளிக்கூட கட்டிடத்தை வர்ணம் தீட்டி ஓவியங்களால் அழகு படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

வரும் கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து படிக்க உள்ளனர். இது தவிர புதிய மாணவர்களை கவரும் வகையில் பள்ளிக்கூட கட்டிடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளி கூடம் மீதான பார்வை மாறுபடும். இதனால் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு ஆர்வமாக வரக்கூடிய சிந்தனை ஏற்படும்.

இதற்காக தன்னார்வத்துடன் திருப்பூரை சேர்ந்த ஆசிரியர்கள் வந்து வர்ணம் பூசி ஓவியங்கள் வரைந்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story