பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து தஞ்சையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த கூடிய பணி இன்று தொடங்கிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய கல்வி மாவட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்தநிலையில் தஞ்சையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வந்த முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்களை ஒருமையில் பேசியதாகவும், தாங்கள் விரும்பிய பகுதியில் விடைத்தாள் திருத்த கூடிய பணியில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மைய முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியை புறக்கணித்தனர்.
முதன்மை கல்வி அதிகாரி ஆசிரியர்களை ஒருமையில் திட்டியது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அதிகாரி நேரில் வந்து ஆசிரியர்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பட்டுக்கோட்டையிலும் ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அங்கேயும் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது.