பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களில் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொள்ளிடம்:
பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களில் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டறிக்கை
இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் ஞானபுகழேந்தி, பொருளாளர் மகேஷ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியருப்பதாவது:-
தேர்வு பணியாளர்கள்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக துறை அலுவலர், வழித்தட அலுவலர், பறக்கும் படை அலுவலர், நிற்கும் படை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பாளர் என்று பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்துவதற்கு தேர்வு பணியாளர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.
பணிமூப்பு அடிப்படையில்...
இந்த பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்யும்போது பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இந்த பணியில் இளையோரை துறை அலுவலராகவும், மூத்தோரை கீழ்நிலை பணியாளராகவும் நியமிக்கும்போது மூத்த ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். இதனால் பணியில் தொய்வு ஏற்படுகிறது.
மேலும் ஆசிரியர்கள் பணிபுரியும் வட்டாரங்களில் அவர்களுக்கு தேர்வுபணி வழங்க வேண்டும். பெண் ஆசிரியர்களுக்கு பஸ் வசதி உள்ள மையங்களில் தேர்வு பணி வழங்க வேண்டும். கர்ப்பிணிகள், மாற்று திறனாளிகளுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.