பள்ளி கல்வித்துறை ஊழியர்களை உடனடியாக பணியில் சேர உத்தரவிட வேண்டும்
கலந்தாய்வு மூலம் இடம் மாறுதல் பெற்ற பள்ளி கல்வித்துறை ஊழியர்களை உடனடியாக பணியில் சேர உத்தரவிட வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கலந்தாய்வு மூலம் இடம் மாறுதல் பெற்ற பள்ளி கல்வித்துறை ஊழியர்களை உடனடியாக பணியில் சேர உத்தரவிட வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கலந்தாய்வு
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றிய அனைத்து அமைச்சு பணியாளர்களுக்கும் இடம் மாறுதல் கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. கலந்தாய்வு முடிந்து 10 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட பதவிகளில் உரிய பணியாளர்களை நியமிக்கவில்லை.
மேலும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பண பலன்கள், ஆண்டு ஊதிய உயர்வு, விழா முன்பணம், சேமநல நிதி கடன் பெறுதல் தொடர்பான ஆணை வழங்குதல் போன்ற எந்த செயல்களும் நடைபெறாமல் பள்ளி கல்வித்துறை முடங்கி போய் உள்ளது.
அகவிலைப்படி
எனவே உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு கல்வித்துறை அதிகாரிகளை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு உரிய பணிகளை பிரித்து கொடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் போன்ற அலுவலகங்கள் முறைப்படி செயல்பட உடனடி ஆணை வழங்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை நாள் 24.10.2022 நெருங்கிவிட்டதால் மத்திய அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளபடி மாநில அரசும் 4 சதவீத அகவிலைப்படியை 1.7.2022 முதல் நிலுவையுடன் வழங்கிட வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழக அரசு உடன் ஆணை வழங்கியும் உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.