தட்டிக்கேட்ட ஆசிரியர்கள் மீது தாக்குதல்


தட்டிக்கேட்ட ஆசிரியர்கள் மீது தாக்குதல்
x

தஞ்சை அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் இதை தட்டிக்கேட்ட ஆசிரியர்களை தாக்கினார். இந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

வல்லம், ஜூன்.21-

தஞ்சை அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் இதை தட்டிக்கேட்ட ஆசிரியர்களை தாக்கினார். இந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு உயர்நிலைப்பள்ளி

தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் - தஞ்சை சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் வந்தனர். காலை 9.30 மணி அளவில் பள்ளியின் முன்புறம் உள்ள திடலில் வழிபாடு நடைபெற்றது.இதில் மாணவ - மாணவிகள் திடலில் நின்று கொண்டிருந்தனர் திடல் முன்பு இருந்த மேடையில் தலைமையாசிரியை உள்பட பல ஆசிரியர்-ஆசிரியைகள் நின்று கொண்டிருந்தனர்.

தாக்குதல்

அப்போது திடீரென பள்ளி வளாகத்துக்குள் வந்த கள்ளப்பெரம்பூர் புதுக்காலனியை சேர்ந்த செல்வக்குமார்(வயது38) என்பவர் ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்த மேடை மீது ஏறினார். பின்னர் அவர் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசினாா். அவரிடம் பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா கரோலின் பேசினார்.இதை பொருட்படுத்தாத செல்வகுமார் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை பேசிக் கொண்டே இருந்தார். இதை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் தட்டி கேட்டபோது, அவரை செல்வகுமார் முகத்தில் தாக்கினார். மேலும் பள்ளியின் மற்றொரு ஆசிரியரான மருதுபூபதி என்பவரையும் செல்வகுமார் தாக்கினார்.இதனால் அங்கிருந்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தப்பி ஓட்டம்

உடனே பள்ளி தலைமை ஆசிரியை ஷீலாகரோலின் மற்றொரு பெண் ஆசிரியை, ஆசிரியர் ஜோசப் சகாயராஜ் ஆகியோர் செல்வக்குமாரை சுற்றி நின்று தட்டி கேட்டுள்ளனர். அப்போது செல்வகுமார் பள்ளி தலைமையாசிரியை ஷீலா கரோலினாவை தகாத வார்த்தைகளால் பேசி அவரை மிரட்டயதுடன் அங்கிருந்த ஆசிரியைகளிடம் கத்தியை காட்டி மிரட்டினார். இதைக்கண்ட சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பள்ளிக்குள் சென்று செல்வக்குமாரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் செல்வக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீசில் புகார்

இது குறித்து பள்ளியின் தலைமைஆசிரியை ஷீலா கரோலின் மாவட்ட பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்தாக்குதலில் காயமடைந்த உடற்கல்வி ஆசிரியர் தஞ்சையை சேர்ந்த சண்முகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கைது

அப்போது அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் பதுங்கி இருந்து விட்டு பஸ்சில் தஞ்சைக்கு தப்பி செல்வதற்காக கள்ளப்பெரம்பூர் மந்தை அருகே வந்த செல்வக்குமாரை சப்இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்டுள்ள செல்வகுமார் மீது பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். செல்வகுமாரை தஞ்சை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் அவரை தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story