கோவிலில் காதல் திருமணம்: தாலியை கழற்றி கொடுத்து விட்டு இளம்பெண் சென்றதால் வாலிபர் தற்கொலை கள்ளக்குறிச்சி அருகே சோகம்
கள்ளக்குறிச்சி அருகே கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண், தாலியை கழற்றி கொடுத்து விட்டு சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் அருள்பிரகாஷ் (வயது 25). இவரும், தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து கடந்த 8-ந்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காதல் ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் இளம்பெண் தனது பெற்றோருடன் செல்வதாகவும், மேற்படிப்பு படித்து முடித்து விட்டு 2 ஆண்டுகள் கழித்து அருள்பிரகாசுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி, அவர் கட்டிய தாலி மற்றும் மெட்டியை கழற்றி அருள்பிரகாசிடம் கொடுத்து விட்டு, தனது பெற்றோருடன் சென்றுவிட்டார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அருள்பிரகாஷ் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அருள்பிரகாஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.