பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
மயிலாடுதுறையில் பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறையில் பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் 38-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
மேலும் கைது நடவடிக்கைகளை எடுத்து கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருந்த போதிலும் ஆங்காங்கே கஞ்சா விற்பனை நடைபெற்று வந்த நிலையில் வாலிபர் ஒருவர் பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக மயிலாடுதுறை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தீவிர சோதனை
அதன்பேரில் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது சென்னையில் இருந்து வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையில் 2½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவரை கைது செய்து, 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர் செம்பனார்கோவில் நக்கீரர் தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் கணேஷ்(வயது 20) என்பதும், இவர் சென்னை பாடியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதும், அவ்வப்போது சென்னையில் இருந்து கஞ்சாவை பஸ்சில் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.