கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது


கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x

குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 7 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

கஞ்சா கடத்தல்

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், முருகன், ஏட்டு சந்திரபாபு, காவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் நேற்று காலை குடியாத்தம் அரசு கல்லூரி விளையாட்டு மைதானம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்ததில் அவர் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் அஜித்குமார் (வயது 21) என்பதும், வழிப்பறி உள்ளிட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலம் காலவபல்லி பகுதியில் இருந்து கஞ்சா கொண்டு வந்ததும் தெரியவந்தது.

7 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குடியாத்தம் தங்கம்நகர், புவனேஸ்வரிபேட்டை, சுண்ணாம்புபேட்டை, அம்மணாங்குப்பம் மற்றும் பட்டாவாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அஜித்குமாரை கைது செய்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story