செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துக்கம் தாங்காமல் அவரது தாய் விஷம் தின்று பரிதாபமாக இறந்தார்.
கரூர்,
கரூர் மாவட்டம் சுண்டு குழிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி (44). இந்த தம்பதியின் மகன் செல்வராஜ் (23). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுண்டு குழிப்பட்டிக்கு வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்தே செல்வராஜ் தொடர்ந்து செல்போனை பார்த்து கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைபார்த்து தாய் சுமதி அதிர்ச்சியில் உறைந்தார். மகன் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் கதறி அழுத சுமதி சிறிது நேரத்தில் திடீரென அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தாயும் சாவு
அங்கு அவருக்கு முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்தார்.
மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.