நண்பர்களுக்கு 'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பிவிட்டு வாலிபர் தற்கொலை
குடியாத்தத்தில் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் வாரியார் நகரை சேர்ந்தவர் குமாரவேல், இறைச்சிக்கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் நரேந்திரன் (வயது 23). இவர் தந்தைக்கு உதவியாக ஓட்டலை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் நரேந்திரன் நேற்று அதிகாலை நண்பர்களுக்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் தகவலை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக நரேந்திரனின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் சென்று சென்று பார்த்த போது வீட்டில் நரேந்திரன் தூக்கில் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று நரேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நரேந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.