விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளம் அருகே மோட்டார்சைக்கிள் வாங்க தாயார் பணம் தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
தென்தாமரைகுளம் அருகே உள்ள இடையன்விளையை சேர்ந்தவர் திரவியம். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 22). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
சதீஷ்குமார் மோட்டார் சைக்கிள் வாங்க தனது தாயாரிடம் பணம் கேட்டுவந்துள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக சதீஷ்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அருகில் சென்று பார்த்தபோது, மதுவில் விஷம் கலந்து குடித்திருந்தது தெரியவந்தது. உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் ரஞ்சிதம் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.