விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கொடைக்கானலில் செல்போன் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல் தாலுகா குண்டுப்பட்டி அருகே உள்ள சத்தியக்கரை பகுதியை சேர்ந்தவர் ராசையா. விவசாயி. இவருடைய மகன் பிரபு (வயது 18). இவர் சமையல் கலை படித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் பிரபு தனது செல்போனில் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்றதும், விஷம் குடித்து படுக்கை அறையில் மயங்கி கிடந்தார்.
மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோர் பிரபு மயக்க நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.