வாகனம் மோதி வாலிபர் சாவு
ராமநாதபுரம் அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள உசிலங்காட்டுவலசை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அஜித்குமார் (வயது 22). இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான அடைக்கலம் மகன் முனியசாமி (26) என்பவரும் மானாமதுரையில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை கிளம்பி ஊருக்கு வந்துள்ளனர். ராமநாதபுரம் அருகே களத்தாவூர் பாலம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த மர்ம வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமார் மற்றும் முனியசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தபோது அஜித்குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த முனியசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.