மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு: 5 நாய்களும் இறந்தன
அலங்காநல்லூர் அருகே வேட்டைக்கு சென்றபோது மின்வேலியில் சிக்கி 5 நாய்களுடன் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மதுரை,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் சில வேட்டை நாய்களை வளர்த்து வந்தார். இவர் அவ்வப்போது அந்த நாய்களுடன் கொண்டையம்பட்டி மலையடிவாரத்தில் வேட்டைக்கு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல நாய்களுடன் முயல் வேட்டைக்கு சென்றார். அப்போது இந்த பகுதியில் அய்யணகவுண்டம்பட்டி அசோக்குமாருக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் காட்டு விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் அந்த வேலியை மாணிக்கத்துடன் வந்த 5 நாய்கள் தாண்டுவதற்கு முயன்றன.
நாய்களுடன் வாலிபரும் பலி
அப்போது அந்த நாய்கள் மீது மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு இறந்தன. இரவு நேரம் என்பதால் மின்வேலி இருப்பதை அறியாத மாணிக்கமும், மின்கம்பியை மிதித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
இதை அறிந்த அவரது நண்பர்கள் இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் பிணத்தை கைப்பற்றி வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இறந்து போன நாய்களை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தபின், அங்கேயே புதைக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அசோக்குமாரை கைது செய்தனர்.