உறவினர் வீட்டில் 80 பவுன் நகை- ரூ.4 லட்சம் திருடிய வாலிபர்-நண்பர் கைது
விளாத்திகுளம் அருகே உறவினர் வீட்டில் 80 பவுன் நகை- ரூ.4 லட்சம் திருடிய வாலிபர், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உறவினர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்.
என்ஜினீயர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சல்லிசெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் சவுதி அரபியாவில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் அழகு சுந்தரி, மனைவி ராதா மற்றும் குழந்தைகள் பால்பிரணவ், சஞ்சித் ஆகியோர் ஊரில் வசித்து வருகின்றனர்.
மேலும் தனது குழந்தைகளின் கல்வி வசதிக்காக ராதா விளாத்திகுளத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருடன் அவரது அத்தை அழகு சுந்தரியும் தங்கியுள்ளார். அத்தையும், மருமகளும் வாரத்திற்கு ஒரு முறை சல்லிசெட்டிபட்டிக்கு வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நகை - பணம் திருட்டு
இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி மதுரைக்கு சென்று விட்டு இரவு சல்லிசெட்டிபட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 80 பவுன் தங்க நகை மற்றும் 4 லட்சம் காணமால் போனதாக தெரிகிறது. பீரோ உடைக்கப்படமால் நகைகள் திருடு போயின.
இதுகுறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில், சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இதுதொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த மணிகண்டன் (26), வசந்தகுமார் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராதாவின் உறவினர் என்பது தெரியவந்தது.
செல்லப்பாண்டி தனது வீட்டுச்சாவிகளில் ஒன்றை ராதாவிடமும், தாய் அழகுசுந்தரியிடமும் கொடுத்து வைத்துள்ளார். அழகுசுந்தரிக்கு வயதாகிவிட்டதால் அவர், மணிகண்டனின் வீட்டில் சாவியை கொடுத்து வைத்துள்ளார்.
இதனை பயன்படுத்தி செல்லப்பாண்டி வீட்டில் மணிகண்டன் 80 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்தை திருடியதும், அவர் தனது நண்பர்களான வசந்தகுமார் மற்றும் தேனி மாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் ஆகியோருடன் மதுரையில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது.
மற்றொருவருக்கு வலைவீச்சு
அங்கு மதுபோதையில் இருந்தபோது 80 பவுன் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு பிரபாகரன் தப்பி ஓடியதும், அவர் தனது காதலியுடன் தலைமறைவாக இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனையும் போலீசார் தேடி வருகின்றனர்.