கபடி விளையாட்டில் வாலிபர் காயம்
பனப்பாக்கம் அருகே நடந்த கபடி விளையாட்டில் வாலிபர் காயம் அடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கபாடி போட்டி நடந்தது. இதில் பனப்பாக்கம் அருகே உள்ள தென்மாம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்பவரது மகன் முருகானந்தன் (வயது 19) தங்கள் அணிக்காக விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக கிழே விழுந்ததில் கழுத்து எலும்பு மற்றும் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மீட்டு பனப்பாக்கம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருப்பதால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கான செலவு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவை என்பதால் பாதிக்கப்பட்ட முருகானந்தனின் பெற்றோர் அரசு மற்றும் விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்களின் உதவியை நாடி உள்ளனர்.