விருத்தாசலத்தில் பரபரப்பு பட்டாக்கத்தியோடு சுற்றிய 2 'புள்ளிங்கோ' கைது தலைமுடியை போலீஸ் நிலையத்திலேயே வெட்டி அகற்றினர்
விருத்தாசலத்தில் பட்டாக்கத்தியோடு சுற்றிய 2 புள்ளிங்கோவை போலீசார் கைது செய்து, அவர்களது தலைமுடியை போலீஸ் நிலையத்தில் வைத்தே வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் 2 வாலிபர்கள் பட்டாக்கத்தி மற்றும் உருட்டு கட்டைகளுடன் சுற்றிதிரிந்து கொண்டு இருந்தனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மோட்டார் சைக்கிளிலும் சென்று வந்தனர்.
இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் விரைந்து சென்று, அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
2 பேர் கைது
அதில், விருத்தாசலம் மேட்டு காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார் (வயது 20), பூந்தோட்டம் முருகானந்தம் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (22) என்பதும், இருவரும் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரையும் கைது செய்து, பட்டாக்கத்தி மற்றும் உருட்டு கட்டையை பறிமுதல் செய்தனர்.
தலைமுடியை வெட்டினர்
இதற்கிடையே கைதான இருவரும் 'புள்ளிங்கோ ஸ்டைலில்' தலையில் வித்தியாசமாக முடியை வளர்த்து இருந்தனர். போலீசார் சலூன் கடைக்காரர் ஒருவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, அந்த வாலிபர்களின் தலை முடியை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
போலீஸ் நிலையத்திலேயே 2 பேரின் தலை முடியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.