கணவர் மிரட்டுவதாக டெலிவிஷன் நடிகை ரக்ஷிதா போலீசில் பரபரப்பு புகார்
டெலிவிஷன் நடிகை ரக்ஷிதா தனது கணவர் மிரட்டுவதாக போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மாங்காடு,
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு இருவரும் ெசன்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.
கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதா பங்கேற்றார். மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார்.
போலீசில் புகார்
இந்தநிலையில் ரக்ஷிதா, மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் அவர், "நான் தினேசை பிரிந்து தனியாக வசித்து வருகிறேன். கடந்த சில நாட்களாக அவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் போலீசார் நேற்று தினேசை விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரக்ஷிதா வேண்டுமானால் விவாகரத்து பெற கோர்ட்டை நாடி கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த புகார் தொடர்பாக ரக்ஷிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக டெலிவிஷன் நடிகை ரக்ஷிதா அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்பம் சம்பந்தமான புகார் என்பதால் இருவரும் கோர்ட்டில் பார்த்து கொள்கிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து விட்டு சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.