புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமசாமிகோவில்

பொங்கலூர் அருகே கோவில்பாளையத்தில் புகழ்பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமான நாள் என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ராமசாமி கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:- இந்த ஆண்டின் முதல் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்று காத்துள்ளனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமம் இன்றி செல்ல தடுப்புகள் மற்றும் நிழல் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரிவரதராஜ பெருமாள்

இதேபோல் அவினாசியில் உள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவிலில்.நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கர ஆராதனை நடந்தது. இதையடுத்து கோவில் உள்பிரகாரத்தில்சாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அவினாசி வீரஆஞ்சநேயர் கோவில், கருவலூர் வெங்கட்டரமனப்பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டுசிறப்பு வழிபாடு நடந்தது.

சேவூர் வெங்கடேசபெருமாள்

சேவூர் அருகே மேலதிருப்பதி என போற்றப்படும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு திருமஞ்சன அபிஷேகமும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகளும், தீபாரதனைகளும் நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருவிழாவையொட்டி, கோவை, திருப்பூர், அவினாசி, புளியம்பட்டி, நம்பியூர் ஆகிய பகுதிகளிலிருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story