சீங்காடு கிராமத்தில் மாரியம்மன், மந்தராலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே சீங்காடு கிராமத்தில் உள்ள மாரியம்மன், மந்தராலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் கணபதி பூஜை, புது விக்ரக கரிகோல ஊர்வலம், ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், புண்யாகவாசனம் போன்றவை நடந்தன. தொடர்ந்து அக்னி ஆராதனம் செய்யப்பட்டு, கும்ப பிரதிஷ்டை நடந்தது. மாலை நூதன விக்கிரக பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், திருமஞ்சனம், அபிஷேகம், யாகசாலை ஹோமம் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை யாகசாலையிலிருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டு, கலசங்களின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சீங்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.