கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனமர் மல்லிகார்ஜூன சாமி கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, மகா தீபாராதனை, உபகார பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் சாமி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் படித்தனர்.
இதேபோல் தர்மபுரி சிவகாமசுந்தரி உடனமர் ஆனந்த நடராஜர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனமர் மருதவாணேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகாலிங்கேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி மங்களாம்பிகை உடனமர் ஆதிலிங்கேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.