குமார சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:
குமார சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமார சஷ்டி
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் குமார சஷ்டியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அலங்கார சேவையும், உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் வேல்முருகன் கோவிலில் குமார சஷ்டியையொட்டி லட்ச்சார்ச்சனை விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அர்ச்சனையும், பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க நரி வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
சாமி தரிசனம்
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், எஸ்.வி. ரோடு சுப்பிரமணியசாமி கோவில், கோட்டை சண்முகநாதர் கோவில் மற்றும் கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சாமி கோவில் ஆகியவற்றில் குமார சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதேபோல் லளிகம் தண்டாயுதபாணி சாமி கோவில், இண்டூர் சுப்பிரமணிய சாமி கோவில், பாப்பாரப்பட்டி புதிய மற்றும் பழைய சிவசுப்பிரமணிய சாமி கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணிய சாமி கோவில், இருளப்பட்டி சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் குமார சஷ்டியொட்டி சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.