தர்மபுரியில் சக்தி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பென்னாகரம் ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஸ்ரீ சக்தி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து குமாரசாமிப்பேட்டை மகா சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் சக்தி முனியப்பன் கோவிலை தொடர்ந்து கணபதி பூஜை, வாஸ்து பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. பின்னர் சாமிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்த குட புறப்பாடும், இதைத்தொடர்ந்து சாமிக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.