உடுமலையில் உள்ள கோவில்களில் திருக்கார்த்திகை விழா
உடுமலையில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உடுமலையில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருக்கார்த்திகை விழா
உடுமலை மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை சகஸ்ர தரிசன வழிபாடு நேற்று மாலை நடந்தது. விழாவையொட்டி மங்களஇசை, விக்னேஸ்வரபூஜை, சொக்கப்பனை, திருக்கார்த்திகை ஜோதி ஸ்தாபனம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. கோவில் முன்மண்டபத்தில் பக்தர்கள், கார்த்திகைதீபம் ஏற்றிவழிபட்டனர். மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாரியம்மன், கோவில் பிரகாரத்தில் உலா வந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பிரசன்ன விநாயகர் கோவில்
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோவில் முன் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளித்தேரில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
உடுமலை தில்லைநகரில் உள்ள ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தப்பட்டது.
இதேபோன்று உடுமலையில் பல கோவில்களில் திருக்கார்த்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.